கேரள மாநிலம் தலச்சேரி அருகே உள்ள மாஹி பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ். அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி வழக்கம்போல் கடையில் வியாபாரம் நடந்தது. தொடர்ந்து இரவு நகைகளை கணக்கெடுத்தபோது 3 கிராம் செயினை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சைலேஷ், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்து பார்த்தார். அப்போது ஒரு இளம்பெண் செயினை திருடி செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து சைலேஷ் மாஹி போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் செயினை திருடியது தலச்சேரி அருகே உள்ள தர்மடம் பகுதியை சேர்ந்த ஆயிஷா (41) என்பது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலும் ஆயிஷா பல கடைகளில் திருடியது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு போலீசார் ஆயிஷாவை தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.