நாகைப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய் பேச்சை கேட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, தவெக தொண்டர்கள் திடீரென வடமாநில வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார். பெண் ஒருவர் மகளுடன் கூட்டத்திற்கு சென்றபோது, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த பெண்ணின் நகையை கூர்ந்து கவனித்ததாகவும், இதனால் அந்த பெண் தன் மகளிடம் நகையை கழற்றி கொடுத்து பையில் வைக்கச் சொன்னதாகவும் தெரிகிறது. பையில் இருந்த நகையை வடமாநிலத்தவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தவெக தொண்டர்கள் அந்த வாலிபரை தாக்கினர். ஆனால், அந்த நபரிடம் நகை இல்லை. நகையை பறிகொடுத்த சுமதி என்ற அந்த பெண் கூறுகையில், “அந்த நபர் மற்றொரு நபரிடம் நகையை கொடுத்துவிட்டார். 4 சவரன் செயின். எனது மகளுக்காக சேர்த்து வைத்து வாங்கியது, எப்படியாவது எனது நகையை மீட்டுக் கொடுங்கள் ” என கண்ணீர் மல்க கூறினார்.
மேலும், போலீசாரிடம் புகார் கூறியபோது அவர்கள் எந்த நடடிவக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விசாரணைக்குப் பிறகே என்ன நடந்தது என்பது தெரியவரும். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.