Skip to content

 தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காட்டனூரை சேர்ந்தவர் சாந்தகுமார், டிரைவர். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. மோனிஷாவின் தாயார் சக்தி திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்றுவிட்டார். இதனால் தனது தந்தை மாதப்பனுக்கு உதவியாக மோனிஷா குழந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பில்லியானூருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு குழந்தை அம்ரிஷ் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிதுநேரம் கழித்து திடீரென குழந்தையை காணவில்லை என்று மோனிஷா சத்தம்போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் குழந்தை அம்ரிசை தேடி பார்த்தனர்.

அப்போது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது குழந்தை தண்ணீர் தொட்டியில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அம்ரிஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த போலீசார் அம்ரிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

error: Content is protected !!