தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். ஏனென்றால், தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் வரை என ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கொள்கை எதிரி என்றும் கூறி வரும் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாடு முதல் தற்போதைய தேர்தல் பரப்புரையிலும் செல்லும் இடமெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக – தவெகவிற்கும்தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார். இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் விஜய்யின் இந்த கருத்தை அதிமுக உடைக்காவிட்டால் அதிமுகவிற்கு பெரும் சிக்கல் உண்டாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார். 2026 தேர்தலில் திமுகவுக்கும் – தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது என சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.