தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைய அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “விஜய் திமுகவை உண்மையாக எதிர்க்கிறார் என்றால், அதிமுக கூட்டணியில் இணைந்து போராட வேண்டும். தனித்து நின்றால் தவெக அழிந்துவிடும்,” என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” விஜய்க்கு கூட்டம் கூடுவதெல்லாம் சாதாரண விஷயம் தான். அவரை போல அஜித் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் அதைவிட 2 மடங்கு அதிகமாக கூட்டம் கூடும். அதைப்போல ரஜினிக்கு கூடாத கூட்டமா? விமான நிலையத்தில் அன்றைக்கு ஒரு நாள் வந்தார் 5 லட்சம் பேர் வந்திருந்தார்கள். எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒருவர் என்றால் கேப்டன் விஜயகாந்த். அவர் கட்சி ஆரம்பித்து மதுரையில் கூட்டம் வைத்தபோது வந்தக்கூட்டம் மிக்பெரியக்கூட்டம்.
ஆனால், அந்த சமயம் விஜயகாந்திற்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள். ஆனால், விஜய்க்கு அது போன்ற தொண்டர்கள் இன்னும் உருவாகவில்லை. அவருக்கு கூட்டம் மிகப்பெரிய கூட்டம் வருகிறது என்பது உண்மை தான். அதெல்லாம் ஓட்டாக மாறுமா என்பது களத்தில் இறங்கி செய்யும் பணியையும், அரசியல் பக்குவத்தையும் பார்த்து தான். விஜய் தனித்து நின்று வெற்றிபெறுவோம் என்று சொல்வது இந்த காலத்தில் மட்டுமில்லை எந்த காலத்திலும் நடக்காத ஒன்று.
அவருடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகிதான் போகும். நிச்சயமாக அவர் பாஸ் மார்க் வாங்கவேண்டும் என்று சொன்னால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும். அப்படி கூட்டணி வைக்கவில்லை என்றால் திமுகவே இந்த தேர்தலில் தவெகவை ஒழித்துவிடும். எனவே, விஜய் நன்றாக யோசித்துவிட்டு அதிமுக கூட்டணிக்குள் வரவேண்டும்” எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.