தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், தனது முதல் அரசியல் பயணமான ‘மக்கள் சந்திப்பு’ தொடரை திருச்சியில் தொடங்கி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். செப்டம்பர் 20, 2025 அன்று நடந்த இந்த பிரச்சாரங்களில், விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திருச்சியில், அரசின் வளர்ச்சி திட்டங்கள் தோல்வியடைந்ததாகவும், மக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறினார்.
அதைப்போல, நாகப்பட்டினத்தில், மீனவர்களின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி, “மீனவர்கள் துன்பப்படுவதை பார்க்காமல், வெளிநாட்டு சுற்றுலாக்களில் ஈடுபடும் முதல்வர்,” என்று விமர்சித்தார். விஜய்யின் இந்த விமர்சனங்களுக்கு திமுக தரப்பில் பல்வேறு பதிலடிகள் வந்துள்ளன. முதலில், கூட்டுறவு அமைச்சர் அன்பில் மகேஸ், விஜய்யின் குற்றச்சாட்டுகளை “அரசியல் அனுபவமின்மை” என்று மறுத்து, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விளக்கினார்.
அவரை தொடர்ந்து அவருக்கு அடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விஜய் முதலில் தமிழக வளர்ச்சி தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த வகையில், திமுக சபாநாயகர் அப்பாவு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து, விஜய்யின் பேச்சுக்கு கடும் பதிலடி கொடுத்தார்.
சபாநாயகர் அப்பாவு, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது,” என்று விமர்சித்தார். அதனைத்தொடர்ந்து, “CM சார் என்று முதல்வரை அழைக்க என்ன தைரியம்? விஜய்க்கு இந்த அகந்தை எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தொடர்ந்து பேசுகையில் “உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரத பிரதமர் சொன்ன படி தவெக தொடங்கப்பட்டதாக பல ஊடகங்கள் சொல்கிறார்கள். அவர்கள்தான் விஜய்க்கு Y பாதுகாப்பு கொடுத்ததாக சொல்கிறார்கள்,” என்று பாஜகவை சாடினார். அப்பாவு தொடர்ந்து, “தவெகவை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படுபவர்களுக்குத்தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. என்று காட்டமாக பதிலளித்தார்.