சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பள்ளிக்கல்வித்துறை என்பது மிகப்பெரிய குடும்பம். தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம். இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். மொழிக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருதம் ஏற்று இருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கையை ஏற்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? பிடிவாதமாக இருக்கிறார்கள், அது வருத்தமாக உள்ளது.
மாணவர்கள் நலன் சார்ந்து கல்வி நிதியில் மத்திய அரசு அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். ஏன் கடந்த 2 ஆண்டுகளாக நிதி அனுப்பாமல், முரண்டு பிடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைத்ததில் இருந்து, 4,03,079 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது என்று புள்ளிவிவரங்களைப் பார்த்து பேச வேண்டுமே தவிர, அரசியலுக்காகப் பேசக்கூடாது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.