Skip to content

விமான சக்கரத்தில் ஒளிந்து காபூலில் இருந்து டெல்லி வந்த 13 வயது சிறுவன்

  • by Authour

ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ‘காம் ஏர்’ விமானம் காலை 11 மணியளவில், காபூலில் இருந்து டெல்லியில் தரையிறங்கியது.   13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் சக்கரம் வைக்கும் பெட்டியில் ஒளிந்து பயணம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர்கள், விமானத்திற்கு அருகில் சிறுவன் ஒருவன் சுற்றித் திரிவதைக் கண்டு அவனைப் பிடித்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் (சி.ஐ.எஸ்.எஃப்) ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

விசாரணையில், அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும், ‘ஆர்வம் காரணமாக’ அபாயத்தை உணராமல் விமானத்தின் சக்கரம் வைக்கும் பெட்டியில் ஏறிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளான். அவன் சிறுவன் என்பதாலும், உரிய ஆவணங்கள் இல்லாததாலும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அன்றைய தினமே அதே விமானத்தில் அவன் மீண்டும் காபூலுக்கு திருப்பி அனுப்பப்பட்டான். பின்னர் அந்த விமானத்தின் சக்கரப் பெட்டியை சோதனையிட்டபோது, சிறுவனுக்கு சொந்தமானது எனக் கருதப்படும் சிறிய சிவப்பு நிற ஒலிபெருக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இதுகுறித்து இந்திய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் இந்த சிறுவனின் உயிர் பிழைப்பை ஒரு ‘அதிசயம்’ என்றே குறிப்பிடுகின்றனர். ஏனெனில், விமானம் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும்போது, சக்கரம் வைக்கும் பெட்டியில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை குறையும். மேலும், அங்கு காற்றழுத்தம் மற்றும் வெப்ப வசதி இல்லாததால், ஆக்சிஜன் பற்றாக்குறை, உடல் வெப்பம் குறைதல் மற்றும் சக்கரங்கள் உள்ளிழுக்கப்படும்போது நசுங்கி உயிரிழக்கும் அபாயம் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!