தலைநகர் டெல்லியின் கொல்மொஹர் பார்க் பகுதியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா ( 78). இவரது செல்போனிற்கு கடந்த மாதம் 1ம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய மோசடி கும்பல், நரேசிடம் உங்கள் ஆதார் எண் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், இது தொடர்பாக மும்பை போலீசார், அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் பேசுவதாக கூறி பயங்கரவாத வழக்கு விசாரணைக்காக உங்களை டிஜிட்டல் கைது செய்வதாக நரேசுக்கு மிட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலை நம்பிய நரேஷ் தினமும் சுமார் 2 மணிநேரம் டிஜிட்டல் கைதில் வீட்டில் தனி அறையில் இருந்துள்ளார். மேலும், இந்த கைது மற்றும் வழக்கில் இருந்து தப்பிக்கவும் விசாரணைக்காவும் தாங்கள் கொடுக்கும் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும்படி அந்த கும்பல் கூறியுள்ளது. இது தொடர்பாக வேறு யாரிடமும் கூறக்கூடாது என்றும் மீறி கூறினால் குடும்ப உறுப்பினர்களையும் பயங்கரவாத குழுக்களுக்கு உதவியதாக வழக்கில் சேர்த்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. அந்த கும்பலின் மிரட்டலால் பதற்றம் அடைந்த நரேஷ் தனது வங்கியில் இருந்த பணம், முதலீடு, சேமிப்பு என 20 தவணைகளாக மொத்தம் 23 கோடி ரூபாயை அவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். அதேவேளை, இந்த பணம் அனைத்தும் திரும்பி அனுப்பிவிடுவோம், இது ஒரு சாதாரண நடைமுறைதான் என்றும் சொத்து கணக்கு சரிபார்ப்பிற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அந்த கும்பல் கூறியுள்ளது. மேலும், பணம் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி பெயரில் நரேசிற்கு போலி ஆவணங்களையும் அந்த கும்பல் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், அந்த கும்பல் மேலும் ரூ. 5 கோடி அனுப்புமாறு நரேசிடம் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. அப்போதுதான் நரேஷ் தான் மோசடி கும்பலால் ஏமாற்றப்படுவதாக உணர்ந்துள்ளார். இதையடுத்து கடந்த 19ம் தேதி டெல்லி ஹசகான்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சைபர் பிரிவு உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில் நரேசை ஏமாற்ற 4 ஆயிரம் வங்கி கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். தற்போதுவரை நரேசின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பலின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட 2.67 கோடி ரூபாய் பணத்தை டெல்லி போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், நரேசிடம் ரூ.23 கோடியை சுருட்டிய மோசடி கும்பல் குறித்து சைபர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.