தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு (அரசியல் சார்பற்றது) சார்பில் தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் மேக.இளங்கோவன் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
வடக்கு மாவட்ட தலைவர் ஞா.கண்ணன் முன்னிலை வகித்து பேசினார். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் திருச்சி செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணை எண் 234 இன் படி மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கால முறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணி காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களை சிறப்பு கால முறை ஊதியத்திலும், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை காலமுறை ஊதிய கட்டுக்கும் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெறும் ஊதியத்தை வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு குடும்ப நல நிதி பிடித்தம் செய்து அவர்கள் இறந்தால் ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாய், பணிக்கொடை ஒரு லட்சம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.