Skip to content

பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது 

திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர் .அப்போது அப்பகுதியில் போதை மாத்திரைகள், ஊசிகள், வாட்டர் பாட்டில், குளுக்கோஸ் பாட்டில் ஆகியவற்றுடன் 5 வாலிபர்கள் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதில் கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அகஸ்டின் கெவின், பொன்மலையைச் சேர்ந்த மெல்வின் மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஜான் பாஸ்கோ, அந்தோணி லாசர் ஆகிய இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கைதானவர்களிடம் இருந்து குளுக்கோஸ் பாட்டில், மாத்திரைகள், போதை ஊசிகள், குடிநீர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

நகைகளுடன் சிக்கிய இளம்பெண்… 

திருச்சி விமான நிலையம் பகுதியில் விமான நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில் அருகே ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவரிடம் 4 செயின், 4 மோதிரங்கள் என 13 1/2 பவுன் தங்க நகைகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் காந்தி நகரை சேர்ந்த விஜயநாதன் மனைவி பிரேமா (  37) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். நகைகளை பறிமுதல் செய்தனர்.

பள்ளி மாணவி பலாத்காரம்.. போக்சோவில் வாலிபர் கைது.. 

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (  26) என்ற வாலிபர் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை அவரது வீட்டு கழிவறைக்கு செல்லும் படிக்கட்டில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரியின் அடிப்படையில் கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி வழக்குப்பதிவு செய்து வாலிபர் முத்துபாண்டியை போக்சோவில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்ற பயணி கைது

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்லும் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த தேவகோட்டையை சேர்ந்த குமார் ( 51) என்பவரின் பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

error: Content is protected !!