வேலுச்சாமிபுரத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது. கரூர் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், “ விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். இந்தியாவில் உள்ள சீன தூதரகம் சம்பவம் தொடர்பாக தனது அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த சம்பவத்தில் சீன நாட்டினருக்கு இறப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.