Skip to content

மாமனார், மாமியாரைக் கொல்ல சதி; காரை ஏரியில் பாயவிட்டு தப்பி ஓடிய மருமகன்

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மகன் அரவிந்தன் (32). இவரும் பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் நந்தினி என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அரவிந்தன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மாமனார் ராஜாவிடம், உங்கள் மகள் நந்தினி என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வருகிறார். தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அவருக்கு அறிவுரை வழங்குங்கள் என்று கூறி மாமனார் ராஜா, மாமியார் காளியம்மாள் மற்றும் வீட்டில் இருந்த உறவினரின் மகளான 7 வயது சிறுமி பிரசிகா ஆகியோரை தனது காரில் அழைத்துக் கொண்டு ஏலகிரி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஏலகிரி ஏரிக்கரையில் சென்றபோது திடீரென கார் ஏரிக்குள் பாய்ந்தது. ஏரியில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் காரின் கண்ணாடி வரை நீரில் மூழ்கியது.

இந்த நிலையில் அரவிந்தன் தனது மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்யும் நோக்கத்தில் காரை ஏரிக்குள் ஓட்டியது தெரிய வந்துள்ளது.

ஏரிக்கரையில் கார் சென்றபோது ராஜாவுக்கும், அரவிந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன் மாமனார், மாமியாரை கொலை செய்யும் நோக்கத்தில் காரை வேகமாக ஓட்டிச்சென்று ஏரிக்குள் இறக்கியதாக கூறப்படுகிறது. ஏரி தண்ணீரில் கார் மூழ்கியதும் அரவிந்தன் காரில் இருந்து இறங்கி தப்பி சென்று விட்டார். அவரது மாமனார் ராஜா தனது மனைவி காளியம்மாள் மற்றும் சிறுமி பிரசிகா ஆகியோரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்துள்ளார்.

இது குறித்து ராஜா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று மருமகன் அரவிந்தன் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அரவிந்தனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஏரியில் பாய்ந்த காரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நேற்று கிரேன் மூலம் மீட்டனர்.

error: Content is protected !!