தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த துயரத்திற்கு பதிலளிக்கும் வகையில், விஜய் செப்டம்பர் 30 அன்று வீடியோ வெளியிட்டு, “என் வாழ்நாளில் இப்படி ஒரு கடினமான சூழலை சந்திக்கவில்லை. மக்களின் பாசத்தால் கூட்டம் திரண்டது. உண்மைகள் விரைவில் வெளிவரும்,” என்று உருக்கமாகப் பேசினார். மேலும், “சி.எம். சார், பழிவாங்க வேண்டுமானால் என்னை பழிவாங்குங்கள், தொண்டர்களை விடுங்கள்,” என்று கூறி, பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பதாக உறுதியளித்தார்.
இந்த வீடியோவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, விஜயின் கருத்துகள் மற்றும் தவெகவின் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையாக பதிலளித்தார். “ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்குள் வருவது இயல்பு. எங்கள் கட்சி கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்கள் வந்து சென்றுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை ஏற்ற காலியாக வருவது வழக்கம். இதை பிரச்சினையாக்குவது நாகரீகமற்ற அரசியல்,” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும், “விஜய் மற்ற மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தபோது பிரச்சினை இல்லை என்று கூறுவது தவறு. அந்த மாவட்டங்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன. திமுக ஆட்சியில் தான் அவர் பிரச்சாரம் செய்தார். பாதுகாப்பு அளித்தது அதே தமிழ்நாடு காவல்துறை தான். செந்தில் பாலாஜியை குற்றவாளியாக்குவது எப்படி? அவர் வன்முறையை தூண்டினாரா? கல் எறிந்தாரா? இது நேர்மையற்ற அரசியல்,” என்று குற்றம்சாட்டினார்.
அது மட்டுமின்றி, திருமாவளவன், கரூர் சம்பவத்தை விளக்கி, “இது கூட்ட நெரிசல் மரணங்கள். ஒரு சதுர மீட்டரில் 4-5 பேர் மட்டுமே நிற்க முடியும், ஆனால் 10-15 பேர் திரண்டனர். 10 மணி நேரம் காத்திருந்த மக்கள், தற்காப்பு முயற்சியில் தப்பிக்க முயன்று, கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் மிதித்து ஓடியதால் உயிரிழப்பு நிகழ்ந்தது. இது 100% உண்மை. இதை மறைத்து, சதி என்று கூறி, திமுக அரசு மீது பழி சுமத்துவது ஆபத்தான அரசியல். இது விஜய்க்கு நல்லதல்ல,” என்று விமர்சித்தார்.
மேலும், “விஜய் இதை சுயமாக சிந்தித்து பேசவில்லை. அவரைச் சுற்றியுள்ளவர்கள், குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் தொடர்புடையவர்கள், உசுப்பேற்றி பேச வைக்கின்றனர். ஹேமமாலினி தலைமையில் ஒரு குழு வந்துள்ளது. இவர்கள் கருத்து உருவாக்கம் செய்கிறார்கள். விஜய் சுயமாக சிந்தித்து பேசினால் மட்டுமே அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும்,” என்று கூறினார்.