அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறி முறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று மதுரை உயர்மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி செந்தில் குமார் காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; அரசு அமைதியாக இருக்க முடியாது. விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய என்ன தடை?; புகார் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா?.நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.
ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்ன கட்சி இது?. சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். நீதிமன்றம் மவுன சாட்சியாக இருக்க முடியாது. கரூர் நிகழ்ச்சிகளின் விளைவுகளை மொத்த உலகமும் கண்டிருக்கிறது. தவெகவுக்கு தலைமைத்துவ பண்பே இல்லை. கட்சியின் தலைவர் முதல் அனைவரையும் சம்பவ இடத்தில் இருந்து மறைந்துவிட்டனர். கட்சி தொண்டர்களை விட்டுவிட்டு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மறைந்துவிட்டனர். தவெகவுக்கு நீதிமன்றம் காட்டமான கண்டனங்களை தெரிவிக்கிறது. மக்களையும், குழந்தைகளையும் மீட்டிருக்க வேண்டும்; அதை செய்யாமல் செல்வதா?. சம்பவத்துக்கு பொறுப்பேற்காத தவெகவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அனைத்து கட்சியினரும் மீட்புப் பணியில் இருந்தபோது தவெகவினர் மட்டும் வெளியேறியுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவிடுகிறது. வழக்கு ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிடுகிறோம்.”இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.