அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோவிலில் ஆகும். ஆறடி உயரமுள்ள தசாவதார சிற்பங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ள திருக்கோயில் இது மட்டுமே. இக்கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேரோட்ட திருவிழா கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிம்ம வாகனம், சேஷ வாகனம், குதிரை
வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா கோவிந்தா” என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். விழாவில் கடைசி நாளான இன்று பத்தாம் நாள் திருவிழாவாக ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் ஆல் மேல் பல்லாக்கில் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீடுகள் தோறும் பக்தர்கள் தேங்காய் பழம் பூ ஆகியவற்றை பெருமாளுக்கு படைத்து வணங்கினர். தமிழகத்தின் பாரம்பரிய மேளதாள கச்சேரியுடன், கேரளத்து செண்டை மேளம் முழங்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பதாகை சுமந்த கேரளத்து பெண்கள் மோகினி நடனமாடி பக்தர்களை வெகுவாக கலந்தனர். திரளான பக்தர்கள் நான்கு மாட வீதிகளிலும் பெருமாள் சுவாமியுடன் வலம் வந்து அருளாசி பெற்றனர்.