திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாது ஆசிரியர்களுக்கும் பல்வேறு நோய்தொற்று ஏற்படுவதாகவும்,
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதிகளில் கடந்த சில தினங்களாக நாட்களாக பெய்த மழை காரணமாக பள்ளி வளாகத்தில் மீண்டும் மழை நீர் குளம் போல் தேங்கி நின்ற நிலையில்,
மழை நீரை அகற்றக் கோரி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி நுழைவாயில் கதவிற்கு பூட்டு போட்டு, நுழைவு வாயில் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளத்ததின் பேரில், மாணவர்கள், மற்றும் அவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் வாகனம் மூலம் பள்ளி வளாகத்தில் இருந்த மழைநீரை அகற்றினர்.