ஐ.டி.ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு.. வாலிபர் கைது – பொருட்கள் பறிமுதல்
திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழ நெய்க்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். (வயது 55). இவரது மகன் விஜய். ஐ.டி நிறுவன ஊழியர். இவர் வீட்டிலிருந்து முதல் மாடியில் தங்கி இருந்து பணி செய்து வருகிறார். தரைத்தளத்தில் இவரது தந்தையும், தாயும் இருந்தனர். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் ஒரு சத்தம் கேட்டது. அப்போது விஜய் முதல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.அப்போது பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம வாலிபர் 4 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடிவிட்டு தப்ப முயன்றார். அதற்குள் விஜய் அந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த சையது அபுதாகிர் (வயது 30) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா,போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சி பாலக்கரை ரயில்வே குடியிருப்பு அருகே பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று, அங்கு தீவிரமாக கண்காணித்தனர் .அப்போது பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்றதாக முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியைச் சேர்ந்த நைனா முகமது (வயது 26 )என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், சிரஞ்சுகள், குடிநீர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் உறையூர் செல்வமாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்றதாக இளவரசன் வயது (25) என்ற வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
பட்டதாரி பெண் தற்கொலை… உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். (வயது 48). இவரது மகள் எம்.பி.ஏ பட்டதாரி இவர் பெங்களூர் அல்லது சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்தார். வேலை கிடைக்கவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றி, எடமலைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ் வழக்கு பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகிறார்.