Skip to content

500 வாக்காளர் அட்டைகள் குளத்தில் வீச்சு…மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், பிஜாவர் நகரின் 15வது வார்டுக்கு உட்பட்ட ராஜா தலாப் குளத்தில், நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணியாளர்கள் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மிதந்து வந்த பை ஒன்றில் சுமார் 400 முதல் 500 வரையிலான வாக்காளர் அட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த அட்டைகள் அனைத்தும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள், அவை எப்படி குளத்திற்குள் வந்தன என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த அட்டைகள் தங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியவை என்றும், ஆனால் அவை தங்களுக்கு வந்து சேரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே கூறுகையில்,
ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ என்ற பிரசாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்கத் தவறினால், காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார். சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் யாதவ் கூறுகையில், 500 முதல் 600 வாக்காளர் அட்டைகள் எப்படி குளத்திற்கு வந்தன? கள்ள ஓட்டுகள் போடப்பட்டு, இப்போது ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றனவா? தேர்தல் ஆணையம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!