Skip to content

கரூர் செல்ல அனுமதிக்கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்…

  • by Authour

கரூர் மாவட்டம் பரப்புரையில் செப்டம்பர் 27 அன்று தமிழ் வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு விஜய் இதுவரை கரூரை நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கவில்லை.

எனவே, மற்றகட்சியை சேர்ந்தவர்களை இதனை வைத்து விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். திமுக அமைச்சர் துரைமுருகன், “தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் வெளியே வரத் தயங்குகிறார்” என்று சாடினார். அதிமுக தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, “பொறுப்பேற்க வேண்டியவர்கள் தப்பிக்கிறார்கள்” என விமர்சித்தார்.

இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த 33 பேரின் குடும்ப உறுப்பினர்களுடன் விஜய் வீடியோ கால் மூலம் தொடர்ந்து பேசி ஆறுதல் கூறி வருகிறார். அக்டோபர் 8 அன்று காலை முதல் மாலை வரை 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் அவர் தொடர்பு கொண்டதாக ஒரு தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஒவ்வொரு குடும்பத்துடனும் 15 முதல் 20 நிமிடங்கள் பேசி, “நடக்கக்கூடாதது நடந்துவிட்டது, ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று உருகி, நிதி உதவி மற்றும் உதவிகளை உறுதியளித்தார்.

குறிப்பாக, உயிரிழந்த தனுஷ்குமாரின் தங்கை ஹர்ஷினியிடம் “அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன்” என உறுதி அளித்தது போன்று, பல குடும்பங்களுக்கு உணர்ச்சிமிக்க ஆறுதல் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ கால்களுக்கு மாற்றாக, விஜய் கரூரை நேரடியாகச் செல்ல அனுமதி கோரி தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கும் நோக்கில் கரூர் பயணம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. த.வெ.க. இளைஞரணி மற்றும் கொள்கைப் பரப்பு அணி நிர்வாகிகள் இந்தக் கடிதத்தைத் தயாரித்து அனுப்பியதாகத் தெரிகிறது. த.வெ.க. கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம். இன்று (அக்டோபர் 8) நேரில் சென்று அனுமதி கோர இருக்கிறோம்” என்று தெரிவித்தார். விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் அவர், “விஜய் தன் தொண்டர்களின் துயரத்தில் ஈடுபட்டுள்ளார். நேரடி சந்திப்பு விரைவில் நடைபெறும்” என உறுதியளித்தார்.

error: Content is protected !!