பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், அக்டோபர் 5 அன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதய பிரச்சனை சந்தேகத்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் சாதாரணமானவை என்று மருத்துவமனை தெரிவித்தது. ராமதாஸின் உடல்நிலை நிலையானதாக இருந்தது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், அக்டோபர் 8 அன்று தொலைபேசி மூலம் ராமதாஸைத் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். இது குறித்து திருமாவளவன் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் ” பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” எனவும் கூறியுள்ளார். இந்தத் தொடர்பு, இரு கட்சித் தலைவர்களுக்கிடையேயான நல்லுறவை வெளிப்படுத்தியது.
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராமதாஸை, அக்டோபர் 7 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீடு திரும்பிய அவர், உடல்நிலை நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியபோது, “எனக்கு ஓய்வே கிடையாது” என்று ராமதாஸ் பதிலளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.