நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் கே1 அரசு பேருந்து தினந்தோறும் 7 முறை சென்று வருகிறது . இந்நிலையில் குமாரபாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி ஆவத்தி பாளையம் என்ற பகுதி அருகே இன்று காலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியரும் இலவச மகளிர் பேருந்து என்பதால் , ஈரோட்டிற்கு பணிக்கு செல்லும் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் பஸ்சில் பயணம் செய்தனர். பள்ளி நேரம் என்பதால் ஏராளமான மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்றபடியே பயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஆவத்திப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே பயணிகளை ஏற்றுவதற்காக அரசு பேருந்து நின்றது. பேருந்தை ராமு என்பவர் ஓட்டி வந்தார்.அங்கிருந்த பயணிகளை ஏற்றுக் கொண்டு பேருந்து மெதுவாக சென்று ஒரு வேகத்தடையின் மேலே ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பின்புற படிக்கட்டு பகுதி கழண்டு கீழே விழுந்தது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி. பார்த்த போது பேருந்தின் பின்புறப் படிக்கட்டு பகுதி துருப்பிடித்து நிலையில் கீழே விழுந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து தற்காலிகமாக கயிறுகள் மூலமாக பேருந்தின் படிக்கட்டு மற்றும் கதவு பகுதி கட்டப்பட்ட நிலையில் பேருந்து பவானி போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு செல்லபட்டது. காலை நேரத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்ற அரசு பஸ் பின்புறம் படிக்கட்டு பகுதி கழண்டு விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் ஏறி சென்றனர்.