வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடந்த ஒரு வார காலமாக வனவிலங்குகள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவ மாணவிகள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை ஆனைகட்டி பகுதியில் மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் வனவிலங்குகள் வாரத்தை முன்னிட்டு மனித மிருக மோதல் தடுப்பு குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் யானைகள் மனித மோதலை தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்ற பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இதில் அங்கு பணிபுரியும் பறவைகள் மற்றும் வனவிலங்கு ஆய்வாளர்கள், பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனைகட்டி பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய இந்த பேரணியானது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் கடந்து தனியார் மருத்துவமனை அருகில் நிறைவு பெற்றது.