சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் குணவத் ( 26). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்க கட்டிகளுடன் சென்னை திரும்பினர். காரில் அவருடன் இரண்டு ஊழியர்கள் இருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் அருகே வந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக காரை நிறுத்தி அதிலிருந்து 3 பேரும் கீழே இறங்கினர்.
அப்போது அந்தக் காரை பின் தொடர்ந்து வந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் குணவத் உள்ளிட்ட மூன்று பேரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, காரில் இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கக்கட்டிகளை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த தலையில் கொள்ளையர்கள் மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய பிரதேசத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மங்கிலால் தேவாசி (22) மற்றும் விக்ரம் ஜாட் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 9.432 கிலோ தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 5 பேர் ஏற்கனவே தமிழக காவல்துறையினர் கைது செய்து இருந்தனர் பின்னர் ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்
இன்று வழக்கு விசாரணைக்காக திருச்சி ஜே எம் .எண் -3 நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 7 பேரையும் ஆஜர் படுத்தினர்.
மீண்டும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து, அதற்காக இன்று மனு தாக்கல் செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகளை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.இதை அடுத்து ஏழு பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் வைத்து ஏழு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது அவர்களிடம் கேள்விகள் கேட்டு துருவி துருவி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் நடந்த சம்பவத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.தொடர்ந்து ஏழு பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் முடிவில் இவர்கள் பின்னணியில் இருப்பவர்கள் விவரம் தெரியவரும் என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.