மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்னை வந்தது. அந்த விமானத்தில் 76 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்த போது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் காணப்பட்டது.
விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு விமானி இந்த விரிசலை கவனித்தார். இதையடுத்து அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். உடனே விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானத்தை பத்திரமாக தரைஇறக்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதையடுத்து இரவு 11.12 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த 76 பயணிகளும் உயிர் தப்பினர். எந்தவொரு காயமும் ஏற்படாமல், அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானம் பத்திரமாக தரையிறங்கிய பிறகு பழுதுபார்க்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தொழில்நுட்பக்குழுவினர் உடனடியாக சேதமடைந்த கண்ணாடியை மாற்றி சரி செய்தனர். விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.