மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 – 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அந்த குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் குடித்த, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில், நச்சுத் தன்மை ஏற்படுத்தும், ‘டை எத்திலின் கிளைகால்’ என்ற ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். ‘ஸ்ரீசன்’ நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்பது தற்போது அம்பலமாகிஉள்ளது.
சென்னையில் ஸ்ரேசன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது.