Skip to content

41 குடும்பத்திற்கு மாதம் ரூ. 5000…. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்

கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசு நிதியுதவியை அறிவித்திருந்தது. அதேபோல தவெகவும் அறிவித்திருந்தது. மத்திய அரசும் உதவியுள்ளது. பல்வேறு கட்சிகளும் உதவியுள்ளன. இந்த நிலையில் தவெகவைச் சேர்ந்தவரும் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவருமான மரிய வில்சனும் தற்போது ஒரு உதவியை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாங்கள் அறிவித்தபடி, கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டான பலன் சென்று சேரவேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறேன். அக்குழு இன்று அவர்களை சந்திக்கிறது. ஏற்கனவே நான் அறிவித்தபடி, கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும், ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி 5,000/- ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்/தலைவியின் வாழ்நாள் முழுக்க வழங்க இருக்கிறேன். இன்று முதல் என் குழு செயற்பாட்டை ஆரம்பிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டிருந்த இன்னொரு அறிக்கையில், கரூர் துயர சம்பவம் இன்றும் என் இதயத்தை கடைந்துகொண்டே இருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஈடாக நாம் எதையும் செய்துவிட முடியாது. ஆனால் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற துணைநிற்க முடியும். அந்த வகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பள்ளி, கல்லூரிச் செலவுகளை ஏற்கவும், எங்கள் குழுமத்தில் வேலை வாய்ப்பை வழங்கவும், ஆயுள் காப்பீடு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். காயம்பட்ட இதயங்களுக்கு களிம்பு தடவும் என்னுடைய சிறு முயற்சி இது என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!