அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள, பெரியார் உலகத்திற்கு நிதி பங்களிப்பு தரும் நிகழ்ச்சி அரியலூர் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, திக நிர்வாகிகள் மற்றும் குடும்பங்களிடமிருந்து பெரியார் உலக கட்டமைப்புக்கான நிதிப்பகிர்வாக முதற்கட்ட தொகையாக ரூ.10-இலட்சம் பெற்றுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
சிபிஐ விசாரணை என்றதும் தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் வெளியேவந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…
சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது எந்த வகையில் சரியானது என்பது, பல அரங்கங்களில் இப்போது கேள்வியாகிருக்கிறது. இதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் சொல்கிறேன். பத்திரிகைகள் கூட இதை தவறான உத்தரவு என்று விமர்சிக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் தலைமறைவாக இருந்த தவெகவினர், இப்போது வெளியே வருவது மட்டுமல்ல. நீதி வெல்லும் என்று சொல்கிறார்கள். முதலில் சிரிப்பது முக்கியமல்ல. இறுதியில் யார் சிரிக்கிறார்கள், யார் உணர்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
முதல் பிரச்சினையே அவசர அவசரமாக வீட்டுக்கு சென்று அந்த நடிகர் தன்னை பாதுகாத்துக் கொண்டார். இப்போது காவல்துறை சொன்னார்கள் என்று சொல்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை விசாரிப்பதில் என்ன இருக்கிறது.
வேகமாக வந்தது முதலமைச்சர் மட்டுமே. அடுத்த 12 மணி நேரத்தில் அவர் செய்த பணி மிக அதிகம். இதில் எதுவும் செய்ய முடியவில்லையே என்றதும், இதை அரசியல் மூலதனமாக்க வேண்டும் என்பவர்கள் இதை பயன்படுத்த வந்திருக்கிறார்கள். பொதுவாழ்வில் வந்த கலைஞர், அண்ணா, பெரியார், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் ஓடி ஒளிந்தது கிடையாது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற சங்கடங்கள் நிகழலாம். ஆனால் அதை எதிர்கொள்ள கூடிய துணிவும், தன் கீழ் உள்ளவர்களுக்கு நலூ அறிவுரையும் சொல்லி கட்டுப்பாடு மிக்க ஒரு அமைப்பாக உருவாக்க வேண்டியதற்கு பதில், கட்டுப்பாடு இழந்ததை நியாயப்படுத்த முனைவது அவர்களது கட்சிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பொதுவாழ்க்கை மற்றும் பொது ஒழுக்கத்திற்கு விரோதமானது என்றார்.
பெரியாரின் படங்களை, தவெக கூட்டத்தில் பயன்படுத்துவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்…
பலபேர் இந்த சரக்குகளை தயாரித்ததும், அது எப்படி இருந்தாலும் எங்காவது ரகசியமாக லேபிளை ஒட்டி விடுவர். அதுபோல லேபிள்தாரர்கள் தவிர, இவர்கள் கொள்கைக் காரர்கள் அல்ல.
எங்களைப் போன்றவர்கள் பெரியாரை பரபப்புவதைவிட, பாதுகாப்பது என்பது மிக முக்கியம். அந்தப் பணியில் தற்போது உள்ளோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.