கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் சரத்குமார், கோதூர் ரோட்டில் உள்ள கே ஏ நகரில் உயிரிழந்த பழனியம்மாள், கோகிலாவின் இல்லத்திற்கு சென்று அவர்களது தந்தை பெருமாள், செல்வராணி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக சிறுமிகளின் திருவுறுவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் பல்வேறு வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய
சரத்குமார், மீளமுடியாத துயரச் சம்பவம் இச்சம்பவம் என்றும், ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், துயரத்தில் இருக்கும் இவர்கள் சமநிலைக்கு வந்த பிறகு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது, சிறப்பு புலனாய்வு குழு தலைவர் அஸ்ரா கார்க் சிறந்த அதிகாரி என்றும், அவரது விசாரணை வேண்டாம் என்று சிபிஐக்கு மாற்றம் செய்து இருப்பது தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு பதில் சொல்ல சரியான இடம் இது இல்லை என்றும், நான் ஆறுதல் சொல்லவே வந்ததாக கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார்.