தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை ஆரம்பித்த சோதனையை இரவு முடித்தனர். இந்த சோதனையில் யூனியன் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 1.31 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் யூனியன் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை திடீரென்று ஆய்வுக்கு வந்தனர். அப்போது யூனியன் அலுவலகத்தில் நின்ற கான்ட்ராக்டர் ஒருவரின் காரை சோதனை செய்து விசாரணை நடத்திய போது, அவரிடம் சுமார் ரூ. 1 லட்சம் ரூபாய் இருந்தது.
தொடர்ந்து, யூனியன் அலுவலகத்தின் உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஒவ்வொரு அலுவலர்களிடம் விசாரணை நடத்தி, பணம் எதுவும் லஞ்சமாக பெற்றுள்ளனரா என சோதனை செய்தனர். இருப்பினும், அலுவலர்கள் தரப்பில் இருந்து, ரூ.31 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. கான்ட்ராக்டர் வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் அலுவலர்களிடம் இருந்த பணம் என மொத்தம் ரூ.1.31 லட்சம் கைப்பற்றி, நான்கு மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி சென்றனர்.
மேலும், கான்டராக்டரிடம் இருந்த பணம் ஒரு லட்சம் மற்றும் அலுவலர்களிடம் பணம் குறித்து, விளக்கம் கடிதம் பெறப்பட்டுள்ளதாகவும், அலுவலகத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.