திருச்சி மாநகரத்தின் இதயப் பகுதியாக சின்னக்கடை வீதி விளங்கி வருகிறது. இங்கு துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆடம்பர பொருட்கள் என பல்வேறு கடைகள் உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை ,பெரம்பலூர் , அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்திற்குதேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். வரும் 20 – ந் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சின்னக் கடை வீதி பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
மிகப் பிரம்மாண்டமான ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் இருந்தாலும் நூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகள் இந்த பகுதியில் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகளால் அப்பகுதியில் உள்ள பெரிய கடைகளுக்கு இடையூறாக இருப்பதால் தரைக்கடை வியாபாரிகள் அங்கு நிற்க கூடாது என அவ்வப்போது அறிவுறுத்தி வந்துள்ளனர்.
இந்த சூழலில் நேற்று மதியம் வழக்கம் போல் தரைக்கடை வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்ட போது அவர்களை அங்கிருந்து செல்லுமாறு பெரிய கடை வியாபாரிகள் கூறினர் . அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . ஒரு கட்டத்தில் , தரைக்கடை பெண் வியாபாரிகள் ஜவுளிக்கடை ஊழியரை கைகளால் தாக்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தரைக்கிட வியாபாரிகளும் கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.