எதிர்வரும் 2025- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து நியாயவிலை கடைகளிலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நவம்பர்-2025 ஆம் மாதத்திற்குரிய அரிசி ஒதுக்கீட்டினை, அக்டோபர்-2025 ஆம் மாதத்திலேயே பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளில் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டினை பெற்றவர்களும், அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும், அக்டோபர்-2025ம் மாதத்திற்குரிய அரிசியுடன் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை, முன்கூட்டியே அக்டோபர்-2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்கள் நவம்பர்-2025 மாதத்திற்குரிய அரிசி ஒதுக்கீடு மட்டுமே இம்மாதம் பெறலாம் கோதுமை, துவரம்பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகிய உணவுப்பொருட்கள் வழக்கம்போல் நவம்பர்-2025ம் மாதம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் நவம்பர் 2025 ஆம் மாத அரிசியை, அக்டோபர் 2025 ஆம் மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் வரும் நவம்பர்-2025ம் மாதத்தில், தங்களுக்குரிய அரிசியினைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.