சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் நேரு தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(41). இவர் டாடா ஸ்கை என்ற தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு தனது நிறுவனத்தின் டிஷ் ஆண்டெனா அமைக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கேபிள் ஒயர் அருகில் இருந்த மின்னழுத்த கம்பியில் உராசியது. இதில் ஊழியர் யுவராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதை பார்த்த சக ஊழியர்கள் யுவராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் நிறுவனம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யுவராஜூக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் யுவராஜை பரிசோதனை செய்த போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து எம்ஜிஆர்.நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.