Skip to content

இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம்… சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏதாவது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்றே நெல் முளைத்துள்ளது என்று எதிர்கட்சி தலைவர் கூறுகிறார் என உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை இன்று ஆய்வு செய்ய அமைச்சர் சக்கரபாணி வந்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 299 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 1.60 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 21 ஆயிரத்து 500 ஏக்கரில் அறுவடையும், ஏறத்தாழ 50 ஆயிரம் டன் நெல் கொள்முதலும் செய்யப்பட வேண்டியுள்ளது.

தற்போது 14 லட்சம் சாக்குகள் கையிருப்பில் உள்ள நிலையில், 66 லட்சம் சாக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. நூறு பேல் சணல் இருப்பு உள்ளது. நாள்தோறும் 5 ஆயிரம் டன் நெல் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 4 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் ஒரு லட்சம் டன்னும், வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகளில் 30 ஆயிரம் டன்னும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தற்போது தினமும் 1,250 லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்பி வருகிறோம். மேலும், சரக்கு ரயில்கள் மூலம் தினமும் 8 ஆயிரம் மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்பதற்காக நெல் முளைத்துள்ளதாகக் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் குறுவை சாகுபடி 3.18 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 6.18 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. மாநில அளவில் நிகழ் கொள்முதல் பருவத்தில் 9 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.67 லட்சம் டன்தான் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகமாக இருப்பதால், கிட்டத்தட்ட 3 மடங்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக காலத்தில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடைசி ஆண்டான 2020 ஆம் ஆண்டில்தான் 1,000 மூட்டைகளாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு ஒரு நாளைக்கு 800-லிருந்து 1,000 மூட்டைகள் என்பதை நிரந்தர உத்தரவாக பிறப்பித்தார்.

மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கான லாரிகள் இயக்கத்தில் சுணக்கம் இல்லை. டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 4 ஆயிரம் லாரிகள் நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலையத்திலிருந்து கிடங்குகளுக்கும், வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக லாரிகள் தேவைப்பட்டால் வாடகைக்கு ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில் கலக்கப்பட வேண்டிய செரியூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம்.
அதாவது 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை மாற்றி கடந்த 29-7-25 அன்று மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்தது. அதை பின்னர் டெண்டர் விடப்பட்டு 5 ஒப்பந்தக்காரர்கள் மூலம் விவசாயிகளிடம் பெறப்பட்ட 34 ஆயிரம் மெ.டன் நெல்கள் வாங்கிய நிலையில் அவற்றில் 100 கிலோ விதைக்கு 1 கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டியுள்ளது. இதற்காக அந்த ஒப்பந்ததாரர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு அரிசியை பதிவேற்றம் செய்துள்ளனர். டெல்லியில் உள்ள குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகள் அதனை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்து அவர்கள் அறிக்கை தந்த பிறகு தான் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க முடியும். இதுவரை மத்திய அரசிடம் இருந்து அந்த அனுமதி வரவில்லை. அனுமதி வந்த பிறகு செறிவூட்டப்ட்ட அரிசி கலக்கப்பட்டு விடும் . எனவே நெல் மூட்டைகள் தேங்கி இதற்கு மத்திய அரசுதான் காரணம். இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஏதேதோ பேசி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினர் ச. முரசொலி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் சக்கரபாணி, தஞ்சாவூர் அருகே அருள்மொழிப்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!