திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
