கோவை, கொடிசியா அருகே மது போகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் தடுப்புச் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்து. ஒருவர் கவலைக்கிடம், இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை, அவிநாசி சாலையில் அதிக அளவில் கல்லூரிகள் உள்ளன. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் விடுதிகள் மற்றும் வாடகை வீடுகளில் எடுத்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கொடிசியா அருகே தேனி மாவட்டம் பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் மது போதையில் சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள் சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அதனை அந்த வழியாக சென்று கொண்டு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த விபத்து குறித்து பீளமேடு காவல் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். அதில் ஒரு மாணவன் கவலைக்கிடமான நிலையிலும், மற்ற 2 மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் குறித்து தற்பொழுது முழு விவரம் ஏதும் தெரியாத நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

