தமிழகத்தில் வடகிழக்கு பொறாமை தொடங்கி பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தண்ணீர் வெளியேற்ற டீசல் என்ஜின் பம்புசெட்கள், கழிவுநீர் அகற்றும் லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், ஜெனரேட்டர்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள், பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் வாகனங்கள், டார்ச் லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பருவமழை பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மேயர் சண் ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து விதமான பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன . பாதிப்புகளை உட னுக்குடன் சீர் செய்யும் வகையில் 4 மண்டலத் தலைவர்களைக் கொண்டு மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்குவதற்கான நிவாரண முகாம்கள் 9 இடங்களில் ஏற்படுத்தப்பட்டு அங்கு உணவு, குடிநீர்,மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் புகார்களை 1800-425-1100 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதுவரை 250 புகார்கள் இந்த எண் மூலமாக உள்ளது. அவற்றில் 220 புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், மாநகராட்சி பொறியாளர்கள்,
சுகாதார அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

