குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள நங்கூரான் பிலாவிளையை சேர்ந்தவர் சந்தை ராஜன் (48). இவர் தற்போது இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உண்டு. காவல்துறையின் குற்ற சரித்திர பதிவேடு பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது. கடந்த பிப்ரவரியில் கந்து வட்டி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்தார்.
இந்நிலையில் கடந்த 9ம்தேதி தெங்கம்புதூரை சேர்ந்த மிக்கேல் (52) என்பவரை நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் சந்தைராஜன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவானது. ஆனால் இந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. தன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தேன் என கூறி அதற்கான வீடியோ ஆதாரங்களுடன், சந்தைராஜன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது பற்றி விசாரணை செய்து, சந்தைராஜனை வழக்கில் இருந்து விடுவித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எஸ்.பி. உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பு பிரகாஷ், சந்தை ராஜனை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேரம் பேசி ரூ.3 லட்சம் தருவதாக சந்தைராஜன் தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதில் முதற்கட்டமாக ரூ.1.85 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மீதி பணம் ரூ.1.15 லட்சத்தை கண்டிப்பாக தர வேண்டும் என இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சந்தைராஜன் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசுக்கு புரோக்கர் போல் செயல்பட்ட 2 போலீஸ் ஏட்டுகளை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் லஞ்ச வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசை சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அன்பு பிரகாஷ் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்திலேயே பல்வேறு காவல் நிலையங்களிலும் பணி புரிந்து வருகிறார். இவர் களியக்காவிளை போலீஸ் ஸ்டேசனில் பணிபுரிந்த போது கொள்ளையன் ஒருவன் கொள்ளையடித்த 38 பவுன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாக இவர் மீது வழக்கு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவரது வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் மேற்படி திருட்டு நகைகள் இருந்ததும் அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் நிலுவையில் உள்ளது.

