ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஆந்திராவின் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் திருப்பூரை சேர்ந்த யுவன் சங்கர் ராஜா என்ற இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்தார் .
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவர்கள் உள்பட 43 பேர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூர் மண்டலம் சின்னடேக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் உளிந்த கொண்டா கிராஸ் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிள் மீது பஸ் பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார்சைக்கிள் பஸ்சின் அடியில் சிக்கிக் கொண்டதுடன் அதன் பெட்ரோல் டேங்க் உடைந்து பஸ்சில் தெறித்ததில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியதுகண்இமைக்கும் நேரத்தில் பஸ் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர்.தீப்பிடித்து எரிந்ததும் பஸ் டிரைவர் மற்றும் மாற்று டிரைவர் இருவரும் பஸ்சை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டனர். அதேநேரத்தில் பயணிகள் அனைவரும் உள்ளே சிக்கி கொண்டனர். அவர்கள் பஸ்சின் கதவை திறக்க முயன்றனர்.
ஆனால் துரதிருஷ்டம் கதவின் பெல்ட் அறுந்ததால் அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் உயிர் பிழைக்க வழி தெரியாமல் மரண ஓலம் எழுப்பினர்.இருப்பினும் இந்த கோர விபத்தில் பயணிகள் பலர் பஸ்குள்ளேயே சிக்கி உயிரோடு எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சுதாரித்துக் கொண்டு ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினார்கள். நடுரோட்டில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிவதை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதற்கிடையே பஸ்சில் இருந்து குதித்து உயிர் தப்பிய பயணி ராமிரெட்டி என்பவர் விபத்து குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது பஸ்சுக்குள் உடல் கருகிய நிலையில் 19 பயணிகளை பிணமாக மீட்டனர். அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்து போயிருந்தது.மரபணு சோதனை மூலம் அவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதேபோல பஸ்சின் அடிப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பிணமாக மீட்கப்பட்டார்.
இதன் மூலம் இந்த கோர விபத்தில் மொத்தம் 20 பேர் பலியானது தெரியவந்தது. 22 பயணிகள் பஸ்சில் இருந்து குதித்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பலியான தகவல் கிடைத்துள்ளது.
. 22 வயதான யுவன் சங்கர் ராஜா, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். தீபாவளிக்கு விடுமுறை கிடைக்காத நிலையில், பண்டிகை முடிந்த பிறகு பெற்றோரை பார்ப்பதற்காக வீட்டிற்கு புறப்பட்ட யுவன், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

