Skip to content

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஐசியூவில் சிகிச்சை..

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில்ல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

பின்னர், 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ரோகித் சர்மா – விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முன்னதாக இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த பின் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அதில் அவருக்கு இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த ஸ்ரேயாஸ் ஐயர் சிகிச்சைக்காக பெவிலியன் அழைத்து செல்லப்பட்டார்.

அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் காயத்தின் தன்மை குறித்து ரசிகர்களிடையே கலக்கம் ஏற்பட்டது. இதனிடையே அவரது காயம் குறித்து பிசிசிஐ, “ஸ்ரேயாஸ் ஐயரின் இடது விலா எலும்பில் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. அவரது காயம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று அந்த போட்டியின்போது தெரிவித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயஸ் உடலுக்குள் ரத்தக் கசிவு இருப்பதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!