விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள உவர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன்(34). விவசாயம் செய்து வருகிறார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த கருணாகரன்(21) என்பவரும் நண்பர்களாக சுற்றி திரிந்த நிலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து ஏற்கனவே நரிக்குடி காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க கொலை செய்த கருணாகரன் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்ததாக கூறப்படும் நிலையில் இதற்கிடையே ஏற்கனவே செந்தாமரைகண்ணன் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க கோரி கருணாகரன் பணம் கொடுத்ததாகவும், ஆனால் வழக்கை வாபஸ் வாங்காமல் செந்தாமரை கண்ணன் இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கருணாகரன் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் பாஸ்போர்ட் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது .இதனால் செந்தாமரை கண்ணன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இருப்பினும் நேற்று இரவு செந்தாமரைகண்ணன் மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கண்மாய் கரையில் மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் திடீரென கருணாகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தாமரைக் கண்ணனை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கத்திக்குத்து காயங்களுடன் ஊருக்குள் ஓடி வந்த செந்தாமரை கண்ணன் ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் செந்தாமரைக்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கருணாகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

