Skip to content

குளித்தலை அருகே இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்..

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டி கருப்பன் மகன் ராமன் ( 30). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பொசியம்பட்டியில் இருந்து வாழ்வாரமங்கலம் அருகே தண்ணிபந்தல் மேடு பகுதியில் தனது வீட்டிற்கு, தனது நண்பரான மனோஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

இதில் நண்பர் மனோஜ் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தபோது ராமன் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அப்போது பாளையம்-திருச்சி மெயின் ரோட்டில் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் மண்டல துணை வட்டாட்சியர் உதயகுமார் என்பவர் அதிவேகமாக காரை ஓட்டி வந்து, ராமன் வந்த மோட்டார் சைக்கிளில் மோதி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ராமன் மற்றும் அவரது நண்பர் மனோஜ் ஆகிய இருவரும் மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல் அவரது நண்பர் மனோஜ் என்பவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கடந்த ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இந்த நிலையில் மண்டல துணை வட்டாட்சியர் உதயகுமார் என்பவர் ஓட்டி வந்த கார் எந்த அனுமதியும் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மண்டல துணை வட்டாட்சியர் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இறந்து போன ராமனின் உடலை சீத்தப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பாளையம்-திருச்சி மெயின் ரோட்டில் வைத்து சாலை மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் ராஜாமணி மற்றும் சிந்தாமணிபட்டி போலீசார், சாலை மறியல் செய்த பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

error: Content is protected !!