Skip to content

பீகார் சட்டமன்றத் தேர்தல்…குடும்பத்துடன் வாக்களித்த தேஜஸ்வி யாதவ்!

  • by Authour

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (06.11.2025) காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாநிலத்தின் 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தனது குடும்பத்தினருடன் பாட்னாவில் வாக்களித்தார். அவருடன் முன்னாள் முதல்வர்களான தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தாயார் ராப்ரி தேவி ஆகியோரும் வாக்களித்தனர்.

வாக்களித்த பின்னர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய பீகாரை உருவாக்க, புதிய ஆட்சியை உருவாக்குங்கள்” என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த முதற்கட்டத்தில் தேஜஸ்வி யாதவ், பாஜக தலைவர்கள், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி

மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும். பல உயர் தலைவர்கள் இந்தக் கட்டத்தில் களத்தில் உள்ளனர்.

மேலும், பீகார் மாநிலத்தில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3.92 கோடி, பெண்கள் 3.50 கோடி. மாநிலம் முழுவதும் 90,071 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பும், மற்ற மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. போலீசார், ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பீகாரில் இன்று ஜனநாயகத் திருவிழாவின் முதல் கட்டம். அனைவரும் உற்சாகத்துடன் வாக்களியுங்கள். முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். மக்களின் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவை முக்கியமானதாக ஆக்கியுள்ளன.

error: Content is protected !!