கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கரூரில் சிபிஐ விசாரணை கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சம்மன் அனுப்பி இதுவரை 25க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 19 காவலர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தவெக பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது மயக்கம் அடைந்தவர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள பயணியர் மாளிகைக்கு நான்கு தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் ஒரு ஓட்டுநர் என 5 நபர்கள் விசாரணைக்காக தற்போது ஆஜராகி உள்ளனர்.

