தஞ்சாவூர், கீழவாசல் ராயல்சிட்டி பகுதியை சேர்ந்த விஷ்வா. இவரது வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு அறையில், பாம்பு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனர், சதீஸ்குமார் தலைமையில், லோகநாதன், முத்துப்பாண்டி ஆகியோர் பாம்பை மீட்டனர். அந்த பாம்பு, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகவும் அரிதாகக்காணப்படும் மோதிர வளையன் எனப்படும் டிரிங்கெட் என்கிற இன பாம்பு என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சுமார் 100 செ.மீ., நீளம் உள்ள மோதிர வளையன் பாம்பை மீட் குழுவினர்.
தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனிக்கு தகவல் அளித்தனர். அவர் உத்தரவின் பேரில், வனச்சரகர் ஜோதி குமாருடன், இணைந்து பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.
இது குறித்து சதீஷ்குமார் கூறியதாவது: மோதிர வளையன் பாம்பு ஆசியா கண்டத்தில் காணப்படும் அரிதான இனமாகும். இது உலகளவில் “அழிவின் விளிம்பில்” உள்ள உயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உடலை ‘ஸ்பிரிங்’ போல வளைத்து இரைகளை தாக்கி பிடிக்கக் கூடிய, இப்பாம்பு, மனிதனுக்கு தீங்கில்லாதது. எலி போன்ற சிறு விலங்குகளை உணவாகக் கொண்டு விவசாய நிலங்களின் இயற்கை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் இனமாகும். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் மிகவும் அரிதாக்காணப்படுகிறது.
சமீப காலமாக நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் பாம்புகள் குடியேறுவது அதிகமாகி விட்டன. வீட்டுக்கு வெளியில் போட்டு வைக்கப்படும் தேவையற்ற பொருட்களில் தஞ்சமடைந்து, எலிகளை உணவாக சாப்பிட்டு வாழ துவங்கின்றன. இவ்வாறு கூறினார்.

