2025-ஆம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டா்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம், 1875-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. தொடர்ந்து, 1896-ஆம் ஆண்டு கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் இசையமைத்துப் பாடினாா். அதன்பிறகே வந்தே மாதரம் தேசியப் பாடலாக விடுதலைப் போரின் உணா்ச்சி முழக்கமாக நாடெங்கும் எதிரொலித்தது.
‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமையுடன் கொண்டாடும் வகையில், அதன் நினைவுச் சின்னங்களாகச் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான விழாவில், இந்தச் சிறப்பு வெளியீடுகளை மத்திய அரசின் சார்பில் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த இப்பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் ஓராண்டு கால கொண்டாட்டத்தின் தொடக்கமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில், தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய சுதந்திர இயக்கத்திற்கு ஊக்கமளித்து நாட்டின் பெருமையையும், ஒற்றுமையையும் தூண்டிய இப்பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் ஓராண்டு கால கொண்டாட்டங்கள் 2025 நவம்பா் 7 முதல், 2026 நவம்பா் 7 வரை நடைபெறவுள்ளது.
இந்தச் சிறப்பு நிகழ்வை ஒட்டி, மத்திய அரசின் கலாசாரத் துறை ஏற்பாட்டில், நாடு முழுவதும் சுமார் 150 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டு, தேசிய ஒருமைப்பாடு உறுதி செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களிடையே தேசப் பற்று மற்றும் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சிகளும் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாணயத்தை பொதுமக்கள் ‘www.indiagovtmint.in’ என்ற இணையதளத்தின் மூலம் வாங்கிப் பயன்பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ‘வந்தே மாதரம்’ பாடலின் அழியாப் பெருமையை ஒவ்வொரு இந்தியரிடமும் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

