திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த பாப்பானூர் மேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இருணா பட்டு மற்றும் குருசிலாப்பட்டு எனும் இரண்டு பஞ்சாயத்துகளுக்கு இடையில் இப்பகுதி அமைந்துள்ளதால், இரண்டு பஞ்சாயத்து நிர்வாகங்களும் இப்பகுதிக்கு சாலை, குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காமல் புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று காலை பாப்பானூர் மேடு பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் – ஆலங்காயம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“இல்லையா இல்லையா அதிகாரிகள் இல்லையா?” எனக் குரல் கொடுத்து முழக்கமிட்ட பொதுமக்கள், உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், இரண்டு பஞ்சாயத்துகளுக்கு இடையில் குழப்பமில்லாமல் ஒரே பஞ்சாயத்துக்கு தங்களை இணைத்து நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும் துறை சார்ந்த அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் கலைக்கப்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

