கிருஷ்ணகிரி நகராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் இருந்து வருகிறார். துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சாவித்தரி கடலரசுமூர்த்தி உள்ளார். நகராட்சியை பொறுத்தவரை திமுக கவுன்சிலர்கள் 25 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ், பாஜக கவுன்சிலர்கள் தலா ஒருவரும் என மொத்தம் 33 பேர் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 16-ம் தேதி, திமுக கவுன்சிலர்கள் 23 பேர் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், தலைவரின் செயல்பாடுகள் நகராட்சிக்கும், அரசுக்கும் எதிராக உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடங்கிய மனுவை, நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமாரிடம் அளித்தனர்.
தொடர்ந்து, நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு இன்று 10-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்நிலையில், திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
சங்கரன்கோவில், திட்டக்குடி வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார்.
திமுகவில், பல இடங்களில் உள்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்த பதவியிழப்பு சம்பவங்கள் தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளன.

