ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் (TARATDAC) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான

உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் ஊனத்தின் தன்மையைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 என உதவித்தொகை வழங்கப்படுகிறது. வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் எட்டாவது இடத்தில் உள்ள ஆந்திர அரசு இதனை வழங்கும் நிலையில், வளர்ச்சி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இதனை உயர்த்தி வழங்காதது நியாயமற்றது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஒரு ஆண்டில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் நான்கு முறை மிகப்பெரிய அளவில் போராட்டங்களில் பங்கேற்றும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டோர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தர் வலியை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். இதன்பேரில் மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அரசு சார்பில் பரிசீலனை செய்யப்படும் என்றும், தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த போராட்டத்தில் TARATDAC அமைப்பினர் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்று தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

