மதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பு மற்றும் அவரது மனைவி பத்மாவதி ஆகிய இருவரும் மதுரையிலிருந்து இன்று அதிகாலை அலங்காநல்லூரிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். சிக்கந்தர்சாவடி அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி தம்பதி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து தம்பதி மீது மோதியதில் கணவர் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே பலியானார். தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியும் உயிரிழந்ததால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
முன்னதாக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 4.8 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு 43 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 28 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

